Thursday, March 17, 2011

Arunthathiyar election manifesto

ஜனநாயக அனாதைகள்…

அது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி.

இந்த சமூகத்திற்கு முன்பாக தங்கள் தரப்பைச் சொல்ல நீண்ட நேரமாக அவர்கள் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் காத்திருக்கிறார்கள்.
யார் அவர்கள்?

ஒடுக்கப்பட்ட பிரிவினரிலும் ஒடுக்கப்பட்டவர்களாக, தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தும் திறனோ, தெம்போ இன்றி நாள்தோறும் நலிந்து நைந்து கிடக்கும் அப்பாவி அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகள்.

காலம்காலமாக தீர்க்கப்படாமல் தொடரும் தங்களின் நீண்ட கொடுந்துயரப் பட்டியலை, இந்த சமூகத்தின் முன்பாகப் பதிவு செய்ய, ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகங்களை நம்பி அவர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால், குறித்த நேரம் தாண்டியும் பத்திரிகையாளர்கள் என்று அறியப்பட்ட யாருமே அங்கு வரவில்லை.

நட்பு ரீதியாகவோ அல்லது கருத்து ரீதியாகவோ அக்கறை உள்ள, பத்திரிகை அல்லது ஊடகத்துறை சார்ந்த ஒன்றிரண்டு பேர் வந்து தலைகாட்டிச் சென்றார்கள்.

ஒரு பக்கம் எந்த தொகுதியில் யார் நிற்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான தகவலை வெளியிட பெரிய கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் முன்பு ஒரு பத்திரிகையாளர் கூட்டம்.

மற்றொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட தொழிலதிபரின் தற்கொலை குறித்து, உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவ மனையின் முன்பாக, படபடக்கும் அபிநயத்தோடு நின்றபடியே, நேரலை மூலமாக விவரிக்கும் துடிப்புள்ள ‘யூத்’ செய்தியாளர்கள்….

இத்தனை களேபரத்தில், அறுபதாண்டுகால ஜனநாயகத்திலும், அடிப்படையான மனித உரிமைகூட கிடைக்கப் பெறாமல் அல்லல் படும் அருந்ததி இன மக்களின் குரலைக் கேட்க நமது ஊடகங்களுக்கு நேரமும், நினைப்பும் இல்லாமல் போனதில் வியப்பில்லை.

தேர்தல் சந்தையின் பெருங்கூச்சலில், ஏதிலிகளின் குரல்கள் முனகலாகக் கூட நம் காதுகளில் விழுவதில்லை என்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் தனிப்பெரும் மாண்பு …

ஆனாலும், ஆதிக்கசக்திகளைவிட, நசுக்கப்படும் அடித்தட்டு மக்கள் தேர்தல் ஜனநாயகத்தின் மீது இன்னும்கூட அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான், தேர்தல் வரும் போது, தங்களின் தீர்க்கப்படாத குறைகளை கோரிக்கைகளாக அரசியல் கட்சிகளிடம் முறையிடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில்தான், அருந்ததியர் ஆய்வு மையம், அருந்ததியர் மனித உரிமை அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, அருந்ததி இன மக்களின் சார்பாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. அதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிதான் அது.

அந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் சரசுவதி, அருந்ததி இன மக்களின் இந்த தேர்தல் அறிக்கையில் கோரப்பட்டிருப்பது அவர்களது வாழ்வாதார உரிமைகள் மட்டுமல்ல, மிக அடிப்படையான மனித உரிமைகள் ஆகும் என்று தெரிவித்தார்.

இதனை தொகுத்து வெளியிட்ட அந்த அமைப்புகளின் நிர்வாகிகள், “கையினால் மனிதக்கழிவுகளை அகற்றும் கொடுமை மட்டுமே அருந்ததி இன மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை அல்ல. விவசாயக் கூலிகள், உள்ளிட்ட பல்வேறு அடிமட்டத் தொழிலாளர்களாக அவர்கள் சந்திக்கும் அவலம் சொல்லிமாளாதது. அவற்றைக் கவனப்படுத்தும் முயற்சியாகவே முதல் முறையாக அருந்ததியர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்” என்றனர்.

பெரும்பாலும் அந்த தேர்தல் அறிக்கையை யாரும் வெளியிடப் போவதில்லை என்பதால், அதில் இடம் பெற்றுள்ள முக்கியமான சில அம்சங்கள் உங்கள் பார்வைக்கு….

· அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

· அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டுப் பணியிடங்களில் அதற்குத் தகுதியான அருந்ததியர் கிடைக்காத பட்சத்தில் ஏனைய தாழ்த்தப்பட்ட பிரிவினரை நியமிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பின்னடைவுப் பணியிடமாக அதனைக் கருதி தகுதியான அருந்ததியர் கிடைத்தபின்னரே அந்தப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

· அருந்ததியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தாட்கோ போன்று வங்கி தொடங்கி அதன் மூலம் அனைத்து வகையான தொழில் களுக்கும் வட்டி இல்லாத கடன் வழங்கவேண்டும்.

· பஞ்சமி நிலங்களை மீட்க அதிகாரம் மிக்க ஆணையம் அமைத்து அதனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

· மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவதை குற்றவியல் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும். அதில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதக் கழிவுகளை கையினால் அள்ள வற்புறுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதைப் போல துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஆணையம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

· தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை முழுநேர அரசுப்பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

· புதிய நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களை அருந்ததி இன மக்களுக்குப் பங்கிட்டுத் தரவேண்டும்.

· ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளின் அவலை நிலையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கமுடியாமல் போவதற்கு அவர்களது வேலை நேரமே காரணமாகும். எனவே குழுந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பராமரிக்கும் வகையில் அவர்களது வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

· அருந்ததியர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

· தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதியை அருந்ததியினருக்கு ஒதுக்க வேண்டும்.

· அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்க, அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

· பல்கலைக் கழக துணைவேந்தர்களாகவும், நீதிபதிகளாகவும் தகுதி உள்ள அருந்ததி இனத்தவர் நியமிக்கப்பட வேண்டும்.

· பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்புகளில், அருந்ததியர் குழந்தைகளின் பெற்றோருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இப்படியாக 100 கோரிக்கைகள் அந்த தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை அந்த மக்களால் ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வரும் பழைய கோரிக்கைகளே. ஆனாலும் அவை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் வேதனை.

அந்த வகையில் அவை வெறும் கோரிக்கைகள் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்கள் கூட்டத்தின் அவலக்குரல்.

ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் அந்த எளியமக்களின் துயரக்குரலை அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளாமல் போகலாம். ஊடகங்களுமா?

டாம்பீகமும், கூச்சலும் மிகுந்த நமது ஜனநாயக அமைப்பில் இது போன்ற ஏதிலிகள் அனாதையாக்கப்படுவதும், அதற்கு நான்காவது தூண்களான ஊடகங்கள் துணை போவதும் நல்லதல்ல.

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)

No comments: